ரசிகர்களை கடுமையாக எச்சரித்த விஜய்சேதுபதி..!

ரசிகர்களை கடுமையாக எச்சரித்த விஜய்சேதுபதி..!

விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்துக்கு ‘துக்ளக் தர்பார்’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் கதாநாயகியாக அதிதிராவ் மற்றும் முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடிக்கின்றனர். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ், வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. 

இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார். 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா பூஜை சென்னை வடபழனியில் நடந்தது. இதில் விஜய்சேதுபதி கலந்து கொண்டார். அவருக்கு ரசிகர்கள் சாலையில் பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளித்தனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது.

இதனை கண்டித்து விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது:- இந்த விழாவுக்கு நான் வந்தபோது வரவேற்பு அளிப்பதற்காக சாலையில் வாகனங்களை நிறுத்தி பட்டாசுகள் வெடித்தனர். அதை பார்த்து வருத்தப்பட்டேன். பொதுமக்களுக்கு இடையூறு செய்து இதுபோல் பட்டாசுகள் வெடிப்பது எனக்கு பிடிக்காத விஷயம். பட்டாசுகள் வெடித்து ஏன் காசை கரியாக்குகிறீர்கள்?. இதனால் போக்குவரத்து பாதிப்பதோடு சுற்றுப்புறத்திலும் மாசு ஏற்படுகிறது. பட்டாசுகள் வெடிக்க சொன்னவர்களை நான் கண்டிக்கிறேன்” என்றார். 

விழாவில் பார்த்திபன் பேசும்போது, “படத்தின் தலைப்பில் அதிர்ஷ்டம் இருப்பதால் வெற்றி பெறும்” என்றார். நடிகை அதிதிராவ் பேசும்போது, “விஜய் சேதுபதியுடன் நடிப்பது அதிர்ஷ்டம். செக்க சிவந்த வானம் படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்தேன்” என்றார்.