தினமும் காபி குடித்தால் நீண்டகாலம் உயிர் வாழலாம்- புதிய ஆய்வில் தகவல்

தினமும் காபி குடித்தால் நீண்டகாலம் உயிர் வாழலாம்- புதிய ஆய்வில் தகவல்

காபி குடித்தால் உடல் நலத்துக்கு நல்லது என்றும், அதிகம் குடித்தால் உடல்நலம் பாதிக்கும் என்றும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனால் சமீபத்தில் நடந்த ஆய்வில் அதிக அளவு காபி குடித்தால் நீண்டகாலம் உயிர் வாழலாம் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் இங்கிலாந்தில் ஆய்வு நடத்தினார்கள். அதில் 5 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களிடம் 10 ஆண்டுகள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் அதிக அளவு காபி குடித்தவர்கள் உயிரிழப்பில் இருந்து தப்பித்தனர். அவர்கள் தினசரி 8 ‘கப்’ வரை காபி குடித்தவர்கள் ஆவர். காபியில் உள்ள ‘காபின்’ என்ற மூலப்பொருள் ரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அதே நேரத்தில் காபியில் 1000 ரசாயன பொருள் கலவைகள் உள்ளன. அதில் உள்ள ‘ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்’ எனப்படும் உயிர் வெளியேற்ற எதிர்ப்பிகள் ‘செல்’கள் பாதிப்பில் இருந்து காப்பாற்றுகின்றனர்.

அதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டு நீண்ட நாட்கள் உயிர்வாழ முடியும் என அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு கட்டுரை ஜமா சர்வதேச மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.