19 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்குள் கள்ளத்தனமாக நுழைந்த சீக்கியர் கைது..!!

19 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்குள் கள்ளத்தனமாக நுழைந்த சீக்கியர் கைது..!!

மெக்சிகோ நாட்டு எல்லை வழியாக 19 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்குள் கள்ளத்தனமாக நுழைந்து அங்கு வாழ்ந்து வந்த சீக்கியரை கைது செய்துள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகள் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப தீர்மானித்துள்ளனர்.

வாஷிங்டன்:

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குர்முக் சிங். சீக்கிய மதத்தை சேர்ந்த இவருக்கு தற்போது வயது 46. இந்தியாவில் டாக்சி டிரைவராக இருந்த இவர் கடந்த 1998-ம் ஆண்டு மெக்சிகோ நாட்டுக்கு சென்றார். அங்கிருந்து எல்லை வழியாக உரிய விசா ஏதுமின்றி அமெரிக்காவுக்குள் கள்ளத்தனமாக நுழைந்தார்.

2010-ம் ஆண்டில் அமெரிக்கப் பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்ட குர்முக் சிங், அமெரிக்க நாட்டின் நிரந்தர குடியுரிமைக்காக கடந்த 2012-ம் ஆண்டில் விண்ணப்பித்தார். அப்போது அவர் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி அமெரிக்காவில் இத்தனை ஆண்டுகள் கள்ளத்தனமாக வாழ்ந்து வந்தது அந்நாட்டின் குடியுரிமைத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, கலிபோர்னியா போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஐந்தாண்டுகால சிறைவாசத்துக்கு பின்னர் இங்குள்ள சீக்கிய அமைப்புகள் அவரை ஜாமினில் விடுவித்தன. சிறைவாசத்துக்கு எதிரான வழக்கின் விசாரணையில் அவர் தொடர்ந்து ஆஜராகி வந்தார்.

அமெரிக்கப் பெண்ணின் மூலம் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கும் தன்னை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தும் நடவடிக்கையை கைவிட்டு அமெரிக்க நிரந்தர குடியுரிமை அளிக்க வேண்டும் என அந்நாட்டின் குடியுரிமைத்துறை அதிகாரிகளிடம் அவர் பலமுறை மனு அளித்தார்.

அந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், குடியுரிமை வேண்டி நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரை உடனடியாக நாடு கடத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். 

குர்முக் சிங்கை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் அமெரிக்க குடியுரிமைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், குர்முக் சிங்கின் மகள் மன்பிரீத்(18) தனது தந்தை நாடு கடத்தப்பட உள்ளது தொடர்பாக வேதனை தெரிவித்துள்ளார். என்னுடைய அப்பா கிரிமினல் குற்றம் ஏதும் செய்து விடவில்லை. அமெரிக்க அரசுக்கு ஒழுங்காக வரிகளை செலுத்தி வருவதுடன் நேர்மையானவராக வாழ்ந்து வருகிறார்.