பாபநாசம்- சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் மழையால் வேகமாக உயர்வு

பாபநாசம்- சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் மழையால் வேகமாக உயர்வு

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. நெல்லை, பாளை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், நாங்குநேரி, ராதாபுரம் பகுதியில் பருவ மழை காலம் போல கனமழையும், சாரல் மழையும் விட்டுவிட்டு பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 6239 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 154.75 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.இதனால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று பாபநாசம் அணை நீர்மட்டம் 77.50 அடியாக இருந்தது. அது ஒரே நாளில் மேலும் 8 அடி உயர்ந்து, இன்று காலை 85.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 108.59 அடியாக இருந்தது. அங்கு 13 அடி உயர்ந்து இன்று 121.72 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணை பகுதியிலும் மழை பெய்து வருவதால், அணைக்கு வினாடிக்கு 1481 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 56.75 அடியாக உள்ளது.இதுபோல் கடனாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று 58 அடியாகவும், ராமநதி 4 அடி உயர்ந்து 69.50 அடியாகவும், கருப்பாநதி அணை ஒரே நாளில் 12 அடி உயர்ந்து இன்று 57.75 அடியாகவும் உள்ளது.

கொடுமுடியாறு அணை நீர்மட்டம் நேற்றை விட 3 அடி உயர்ந்து இன்று காலை 47.50 அடியாகவும், அடவி நயினார் அணை 10 அடி உயர்ந்து இன்று 99 அடியாகவும் உயர்ந்துள்ளது. குண்டாறு அணை நேற்று முதல் முழு கொள்ளளவான 36.10 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.தற்போதைய மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 அணைகளுக்கு தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டு இருக்கிறது. வடக்கு பச்சையாறு, நம்பியாறு அணைகளுக்கு மட்டும் தண்ணீர் வரவில்லை. இதனால் வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 2.75 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 9.44 அடியாகவும் உள்ளது.