ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் இந்தியாவில்  அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் இந்தியாவில்  அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் ஸ்லீட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் ரூ.2.12 லட்சம் (ஆன்-ரோடு) சென்னை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் 500 யுனிட்கள் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கும் ஹிமாலயன் ஸ்லீட் லிமிட்டெட் எடிஷன் மாடல் ஆகும். ராயல் என்ஃபீல்டு லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் வாங்க முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் ரூ.5000 தொகையை முதலில் செலுத்த வேண்டும்.

ஜனவரி 12-ம் தேதி முதல் ஜனவரி 30-ம் தேதி வரை முன்பதிவு நடைபெறுகிறது. இதன் விற்பனை ஜனவரி 30-ம் தேதி துவங்கி, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் விற்பனையாகும் 500 ஹிமாலயன் ஸ்லீட் எடிஷனுடன் எக்ஸ்புளோர் கிட் வழங்கப்படுகிறது. 

இந்த எக்ஸ்புளோரர் கிட் 26-லிட்டர் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட அலுமினியம் பேனியர்கள், பேனியர் மவுண்டிங் ரெயில், ஆஃப்ரோடு ஸ்டைல் அலுமினியம் ஹேன்டிள்பார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய பைக் வாங்வோருக்கு இரண்டு ஆண்டுகள் வாரண்டி ராயல் என்ஃபீல்டு சார்பில் வழங்கப்படுகிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் மாடல் அந்நிறுவனத்தின் வழக்கமான மாடலை விட ரூ.28,000 வரை அதிகமாகும். இந்த மாடலில் 411சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 24 பி.ஹெச்.பி. @6500 ஆர்.பி.எம்., 32 என்.எம். டார்கியூ @4500 ஆர்.பி.எம் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.