இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக வீழ்ச்சி...!

இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக வீழ்ச்சி...!

2018 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவீதமாக இருந்தது. சமீப காலமாக பொருளாதார நிலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.இந்த நிதி ஆண்டில் (2019-2020) ஏப்ரல்- ஜூன் வரையிலான முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்தது.அதற்கடுத்த ஜூலை-செப்டம்பர் மாத 2-வது காலாண்டில் 4.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. இது, கடந்த 20 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியாக அமைந்தது.

அதன் பிறகும் வளர்ச்சி விகிதம் சரியாக இல்லை. இதன் காரணமாக இந்த நிதி ஆண்டின் முடிவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று இந்திய புள்ளியியல் துறை அலுவலகம் கணிப்பு வெளியிட்டுள்ளது.இந்திய பொருளாதாரத்தின் நிலை குறித்து புள்ளியியல் துறை அலுவலகம் முழுமையாக கணித்து அதன் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய பொருளாதாரம் 2 இலக்க வளர்ச்சியை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. 5 சதவீத வளர்ச்சி என்பது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி ஆகும்.கடந்த நிதி ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வளர்ச்சி விகிதத்தில் கொண்டு செல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

ஆனால், பொருளாதார மந்தநிலை தொடர்ந்து மோசமாக இருப்பதால் அந்த இலக்கை அடைவதற்கு இன்னும் அதிக காலம் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.நாட்டில் உற்பத்தி துறையில் கடந்த நிதி ஆண்டில் 6.2 சதவீதமாக வளர்ச்சி இருந்தது. அது, 2 சதவீதமாக குறையும் என்று புள்ளியியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது, கடுமையான வீழ்ச்சி ஆகும்.

சேவை துறையில் கடந்த ஆண்டு வளர்ச்சி 7.5 சதவீதமாக இருந்தது. அது. இப்போது 6.9 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.அதேபோல் விவசாயம், கட்டுமானம், மின்சாரம் எரிவாயு, நீர் வினியோகம் போன்ற துறைகளிலும் சரிவு காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.அதே நேரத்தில் சுரங்கம், பொது நிர்வாகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சற்று வளர்ச்சி ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று கூறி இருந்தது.

பெரும்பாலான பொருளாதார நிபுணர்களும் இதே கருத்தை தெரிவித்து இருந்தனர். அதை போலவே இப்போது புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள கணிப்பும் இருக்கிறது.சர்வதேச அளவில் நிலவும் மந்தநிலை, அன்னிய முதலீடு குறைவு, மக்கள் நுகர்வு செலவினங்கள் வீழ்ச்சி போன்றவைதான் பொருளாதார சரிவுக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 காலாண்டுகளில் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.பொருளாதார வளர்ச்சி மந்தநிலை காரணமாக பட்ஜெட்டில் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இந்த நிதி ஆண்டில் மொத்த பற்றாக்குறை 3.44 சதவீதமாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்