தங்கம் விலை சவரனுக்கு 424 ரூபாய் சரிவு

தங்கம் விலை சவரனுக்கு 424 ரூபாய் சரிவு

தமிழகத்தில் தங்கம் விலை, சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது.இந்த நிலையில் ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதலால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இது தங்கம் விலையை அதிரடியாக உயரச் செய்தது.கடந்த சில தினங்களாக முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வதை குறைத்து தங்கம் மீது அதிக முதலீடுகளை செய்து வருகிறார்கள். இதுவும் தங்கம் விலை கணிசமாக உயர காரணமானது.

குறிப்பாக கடந்த 6 நாட்களாக தங்கம் விலை அதிக அளவில் அதிகரித்தது. இந்த 6 நாட்களில் தங்கம் விலை ரூ.1,288 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த சனிக்கிழமை தங்கம் விலை 30 ஆயிரம் ரூபாயை தாண்டியது. அன்று ஒரு பவுன் தங்கம் விலை ரூ.30 ஆயிரத்து 656 ஆக இருந்தது. நேற்று தங்கம் விலையில் வரலாறு காணாத அளவுக்கு ரூ.512 உயர்ந்தது.

இதனால் நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.31 ஆயிரத்தை தாண்டியது. சென்னை நகைக்கடைகளில் நேற்று மாலை ஒரு பவுன் தங்கம் ரூ.31 ஆயிரத்து 168க்கு விற்பனையானது.அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்ட மோதலால் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தங்கம் விலை குறைந்தது. வளைகுடா நாடுகளில் சுமூக நிலை திரும்பி இருப்பதாலும், சர்வதேச சந்தையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாலும் தங்கம் விலை குறைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.53 குறைந்தது. இதனால் சென்னை நகைக்கடைகளில் இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.3843-க்கு விற்பனையானது.இந்த விலை சரிவு காரணமாக தங்கம் விலை ரூ.31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. ஒரு பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்து 744-க்கு விற்பனை செய்யப்பட்டது.வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.1.20 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.51 ஆக விற்பனை செய்யப்பட்டது.