ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.512 உயர்வு

ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.512 உயர்வு

சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.அவ்வப்போது தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது.ஒரு பவுன் ரூ. 30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. இதனால் நகை வாங்குவோர் சற்று அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு பவுனுக்கு ரூ. 1,500 வரை விலை குறைந்தது. பின்னர் விலை சற்று ஏறுவதும் இறங்குவதுமாக காணப்பட்டது.

இந்நிலையில் புத்தாண்டு தொடங்கியதுமே தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. கடந்த 4-ந்தேதி ஈரான் மீது அமெரிக்க ராணுவ படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்தும் போர் பதட்டம் காரணமாகவும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மற்றும் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது.இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. சென்னையில் அன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்து மீண்டும் ரூ. 30 ஆயிரத்தை தாண்டியது.தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. சென்னையில் நேற்று மாலை ஒரு கிராம் ரூ. 3,832-க்கும், ஒரு பவுன் ரூ. 30 ஆயிரத்து 656-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ. 64 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 3,896-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ. 512 உயர்ந்து ரூ. 31 ஆயிரத்து 168-க்கு விற்பனை ஆகிறது.சென்னையில் 2-ந் தேதியில் இருந்து கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் ஒரு கிராம் ரூ. 160 இருந்துள்ளது. பவுனுக்கு ரூ. 1,280 வரை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து நகை வியாபாரிகள் கூறுகையில், ‘அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதட்டம் நீடிப்பதே விலை உயர்வுக்கு முக்கிய காரணம். மேலும் பொருளாதார மந்தம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகிய காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது’ என்றார்.இதேபோல் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ. 1.30 அதிகரித்தது. நேற்று மாலை கிராம் ரூ. 51-க்கு விற்பனையான நிலையில் இன்று காலை அதிரடியாக உயர்ந்து கிராம் ரூ. 52.30-க்கு விற்பனையாகிறது.கிலோவுக்கு ரூ. 1,300 உயர்ந்து ரூ. 52 ஆயிரத்து 300-க்கு விற்பனை ஆகிறது.