பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் பணப்புழக்கம் ரூ.3.5 லட்சம் கோடி குறைந்துள்ளது

பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் பணப்புழக்கம் ரூ.3.5 லட்சம் கோடி குறைந்துள்ளது

பொருளாதார ஆய்வறிக்கை இரண்டாம் தொகுதி நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளி, 11-8-17) தாக்கல் செய்யப்பட்டது. பணமதிப்பு நீக்க தொடக்கத்தில் முறைசாரா தொழிற்பிரிவுகள் பாதிப்படைந்தன. ஆனால் அதன் பிறகு இருசக்கர வாகன விற்பனை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஆட்கள் தேவை ஆகியவை உட்பட பல பொருளாதாரப் பிரிவுகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.வருமானவரிக் கணக்குத் தாக்கல் எண்ணிக்கை அதிகமாகியுள்ளன என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.“ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பண விகிதாசாரத்தில் சமநிலை ஏற்பட்டுள்ளது, பணப்புழக்கம் குறைந்துள்ளது, பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ரொக்கப்புழக்கம் ரூ. 3.5 லட்சம் கோடி அளவுக்குக் குறைந்துள்ளது. ஆனாலும் ஜிடிபி-பண விகிதாச்சாரம் காலத்தில் தொடர்ந்து இப்படி நீடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், இப்போதைக்கு பணப்புழக்கம் குறைந்துள்ளது”, என்கிறது ஆய்வறிக்கை.

மேலும், பணமற்ற நடவடிக்கைகளில் பணமதிப்பு நீக்கத்தின் தாக்கத்தை 3 வகையினங்களாகப் பிரித்துப் பார்க்கலாம். ஏழை மக்கள், அதாவது டிஜிட்டல் பிரிவில் இல்லாத மக்கள் பிரிவினர், 2-வதாக பணம் அதிகம் உள்ள பிரிவினர், அதாவது ஜன் தன் கணக்கு மற்றும் ரூபே அட்டைகள் வைத்திருப்பவர்கள், 3-வதாக முழுதும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்பவர்கள்.

இந்த 3 வகையினங்களில் மூன்று பிரிவுகளிலுமே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரித்துள்ளது. பணமதிப்பு நீக்கத்துக்கு முன்னால் இருந்ததை விட டிஜிட்டல் முறை அதிகரித்துள்ளது என்றே கூற வேண்டும்.பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு வரிசெலுத்துவோர் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது, கடந்த ஆண்டில் 25% என்றால் தற்போது 45% ஆக அதிகரித்துள்ளது. இதனால் 5.4 லட்சம் கூடுதல் வரிசெலுத்துவோர் ஏற்பட்டுள்ளனர்.