தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.528 உயர்வு

தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.528 உயர்வு

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தமிழகத்தில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது.அதன்பிறகு விலை படிப்படியாக குறைந்தது. தொடர்ந்து ஏறுவதும், இறங்குவதுமாக நிலையற்ற தன்மையில் காணப்பட்டது.

இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்க ராணுவபடைகள் நடத்திய தாக்குதலால் கடந்த 3-ந் தேதி தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை தாண்டியது.தொடர்ந்து நிலவிய போர் பதட்டம் காரணமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருந்தது. நேற்று முன்தினம் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பவுன் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது.

ஆனால் நேற்று விலை சற்று குறைந்து கிராம் ரூ.3863 -க்கும், பவுன் ரூ.30,904-க்கும் விற்பனை ஆனது.இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. கிராமுக்கு ரூ.66 உயர்ந்து ரூ.3,929-க்கும், பவுனுக்கு ரூ.528 அதிகரித்து ரூ.31,432-க்கும் விற்பனை ஆகிறது.ஈரான்-அமெரிக்க இடையேயான போர் பதட்டம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை, தங்கம் விலை உயர்ந்ததே இதற்கு காரணம் என நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

போர் பதட்டம் அதிகரித்திருப்பதால் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இதைப்போல வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்தது. நேற்றைய விலையை காட்டிலும் கிராமுக்கு ரூ.1.40 காசுகள் அதிகரித்து ரூ.52.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கிலோவுக்கு ரூ.1,400 அதிகரித்து ரூ.52 ஆயிரத்து 600-க்கு விற்பனையாகிறது.