வாராக்கடன் ரூ.50 கோடி இருந்தால் விசாரணை: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

வாராக்கடன் ரூ.50 கோடி இருந்தால் விசாரணை: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: வைர வியாபாரி நிரவ் மோடியின்  மோசடியை தொடர்ந்து  ரூ.50 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ள அனைத்து வாராக்கடன் கணக்குகள் பற்றி விசாரணை நடத்துமாறு அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து நிதிச்சேவை பிரிவு செயலாளர் ராஜீவ் குமார், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக இயக்குனர்கள், ரூ.50 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ள வாராக்கடன்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும். அதில், மோசடி நடந்துள்ளதா, வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார்களா? என்று ஆய்வு செய்ய வேண்டும்.

மோசடி நடந்திருப்பது தெரிய வந்தால், அந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கு அனுப்ப வேண்டும். இந்த விஷயத்தில், சம்பந்தப்பட்ட வங்கியின் தலைமை ஊழல் ஒழிப்பு அதிகாரி, புகாருக்கு ஒப்புதல் அளிப்பதுடன், சி.பி.ஐ.யுடன் ஒத்துழைக்க வேண்டும்.