பொள்ளாச்சியில் தனியார் குடோனில் பதுக்கிவைக்கப்பட்ட 100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!

பொள்ளாச்சியில் தனியார் குடோனில் பதுக்கிவைக்கப்பட்ட 100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் குடோனில் பதுக்கிவைக்கப்பட்ட 100 கிலோ குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.தமிழகத்தில் புகையிலை, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகளின் கண்காணிப்பை மீறியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை வட மாநிலங்களில் இருந்து லாரி மற்றும் ரயில்கள் மூலம் தமிழகத்துக்கு கடத்தி வரப்படுவதாக கூறப்படுகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள கூட்செட் ரோட்டில் சாதிக் என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. மளிகை பொருட்களை சேமித்து வைக்கும் குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, அந்த குடோனில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ எடையுள்ள குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றை மதுரையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர். ஆய்வுக்கு பின் குடோன் உரிமையாளர் சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.