சென்னை விமான நிலையத்தில் 1½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்...

சென்னை விமான நிலையத்தில் 1½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்...

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின் பேரில் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (வயது 28) என்பவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.

பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.20 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 486 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அதேபோல் கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த கடலூரைச் சேர்ந்த அப்துல் ரசாக் (40), ராமநாதபுரத்தைச் சேர்ந்த இம்ரானுல்லா (37), சிந்தா (49) ஆகிய 3 பேரையும் சந்தேகத்தின் பேரில் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

அதில் 3 பேரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.46 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 90 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.சென்னை விமான நிலையத்தில் 4 பேரிடம் இருந்து ரூ.66 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 576 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இவற்றை யாருக்காக கடத்தி வந்தனர்? என பிடிபட்ட 4 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.