தெலுங்கானாவில் பயங்கரம்- காதல் விவகாரத்தில் ஒரு வாலிபர் படுகொலை

தெலுங்கானாவில் பயங்கரம்- காதல் விவகாரத்தில் ஒரு வாலிபர் படுகொலை

தெலுங்கானா மாநிலத்தில் ஸ்வரன் என்ற வாலிபர் ஆணவ கொலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் காதல் விவகாரத்தில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் கடந்த மாதம் அம்ருதா என்பவரை காதலித்து திருமணம் செய்த ஸ்வரன் என்ற வாலிபர் ஆணவ கொலை செய்யப்பட்டார்.இந்த நிலையில் மீண்டும் காதல் விவகாரத்தில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கரீம்நகர் மாவட்டம் தடிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (23). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவியும் காதலித்தனர்.இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காதல் விவகாரத்தை அறிந்த மாணவி குடும்பத்தினர் குமாரை மிரட்டினர். மேலும் அவர் மீதும் போலீசில் புகார் செய்தனர்.போலீசார் குமாரை மிரட்டி இனிமேல் மாணவியை பார்க்க கூடாது என்று எச்சரித்து அனுப்பினர். அதன் பிறகு குமார் காதலியை பார்க்காமல் இருந்தார்.

நிஜாமாபாத்தில் உள்ள கல்லூரியில் சேர்ந்த காதலியை 6 மாதங்களுக்கு பிறகு குமார் பார்த்தார். இருவரும் நீண்ட நேரம் பேசி கொண்டு இருந்தனர். பின்னர் அங்குள்ள குமார் உறவினர் வீட்டில் இரவு தங்கினர்.மறுநாள் காலை மாணவி தனது வீட்டுக்கு சென்றார். அப்போது இரவு எங்கு இருந்தாய் என்று பெற்றோர் கேட்டபோது காதலன் குமாருடன் தங்கியதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை சித்ரவதை செய்துள்ளனர்.

பின்னர் குமாருக்கு போன் செய்து, இரவு உன்னுடன் தங்கியதால் தங்களது மகளை அழைத்து செல்லுமாறு கூறினர். இதுகுறித்து குமார் தனது பெற்றோரிடம் தெரிவித்து விட்டு சென்றார்.ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் போலீசில் புகார் செய்தனர். ஆனால் புகாரை வாங்க போலீசார் மறுத்து விட்டனர்.இந்த நிலையில் தாடிக்கல் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் குமார் பிணமாக கிடந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

காதலியை அழைத்து செல்லுமாறு வரவழைத்து அவரை கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது. குமார் மாயம் ஆனது குறித்த புகார் அளித்ததும் போலீசார் உடனே நடவடிக்கை எடுத்து இருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர்.