குடிக்க பணம் தராததால் தாய்-தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன்...

குடிக்க பணம் தராததால் தாய்-தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன்...

கோவை அருகே உள்ள விராலியூர் இந்திரா வீதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி துளசி. இவர்களுக்கு சாவித்திரி, நாகமணி, திலகவதி, ராசாத்தி ஆகிய 4 மகள்களும், கார்த்திகேயன் (30) என்ற மகனும் உள்ளனர்.கார்த்திகேயன் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் மனைவி கோபித்து கொண்டு மகனுடன் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் 5 வருடங்களாக தாய் தந்தையுடன் வசித்து வந்தார். அடிக்கடி குடித்து விட்டு பெற்றோரிடமும் தகராறு செய்வார். இது தொடர்பாக தந்தை சுந்தரம் ஆலாந்துறை போலீசில் புகார் கொடுத்து வந்தார்.போலீசார் கார்த்திகேயனை அழைத்து எச்சரித்து அனுப்பி வந்தனர். நேற்று முன்தினம் இரவு கார்த்திகேயன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். பெற்றோருடன் தகராறு செய்தார்.

ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் அரிவாளால் தாய் துளசியின் காலில் வெட்டினார். படுகாயம் அடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இது தொடர்பாக சுந்தரம் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மனம் மாறிய சுந்தரம் மகன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்று கொள்வதாக கூறினார்.

மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற துளசியும் வீடு திரும்பினார்.நேற்று இரவு சுந்தரம், துளசி ஆகியோர் வீட்டில் இருந்தனர். இரவு 9 மணியளவில் கார்த்திகேயன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். பெற்றோரிடம் குடிக்க பணம் கேட்டார். அவர்கள் கொடுக்க மறுத்தனர்.இதனால் தகராறு ஏற்பட்டது. பின்னர் சுந்தரமும், துளசியும் தூங்க சென்று விட்டனர். கார்த்திகேயனும் படுத்து விட்டார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் எழுந்த அவர் குடிக்க பணம் கொடுக்க மறுத்த பெற்றோரை கொலை செய்ய முடிவு செய்தார்.தந்தை சுந்தரம், தாய் துளசி ஆகியோரை சரமாரியாக வெட்டினார். அவர்களது கழுத்து, முதுகு, கால் ஆகிய இடங்களில் பலமாக வெட்டினார். அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள்.

பின்னர் கார்த்திகேயன் வீட்டின் கதவை சாத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இன்று காலை வெகுநேரமாகியும் சுந்தரம் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.அவர்கள் சுந்தரம் வீட்டின் கதவை தள்ளி பார்த்தனர். அப்போது சுந்தரம் கட்டிலுக்கு அடியிலும், துளசி கட்டிலிலும் கொலை செய்யப்பட்ட ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.தப்பி ஓடிய கார்த்திகேயனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.