குர்கான் கொலை :தேர்வை ரத்து செய்ய சிறுவனை கொன்ற 11ம் வகுப்பு மாணவர்

குர்கான் கொலை :தேர்வை ரத்து செய்ய சிறுவனை கொன்ற 11ம் வகுப்பு மாணவர்

புதுடில்லி: கடந்த செப்., 8ம் தேதி அரியானா மாநிலம் குர்கானில் உள்ள ரயான் சர்வதேச பள்ளி கழிப்பறையில் பிரதியுமான் தாக்கூர் (7) என்ற சிறுவன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கபட்டான். பிரதியுமான் பெற்றோர் மற்றும் அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதை தொடர்ந்து வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த செப்.,22 முதல் வழக்கை எடுத்து விசாரணை நடத்திய அதிகாரிகள், கொலை சம்பவம் தொடர்பாக, ரேயான் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவனை கைது செய்தனர்
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பிரதியுமான் உடலை முதலில் பார்த்தது, கைது செய்யப்பட்ட 11ம் வகுப்பு மாணவன் தான். பள்ளி தேர்வை ஒத்திவைக்க இந்த கொலையை செய்துள்ளான். அவனிடம் பல முறை விசாரணை நடத்தப்பட்டது. 
கொலைக்கு முன்னர், இன்று தேர்வு நிச்சயம் ஒத்திவைக்கப்படும். யாரும் கவலைப்பட வேண்டாம் என தனது நண்பர்களிடம் கூறியிருந்தான். அவனது பள்ளி சான்றுகளிலும், சிறந்த மாணவன் அல்ல எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதியுமானுடன் கழிப்பறைக்கு சென்ற 5 நபர்களில் அவனும் ஒருவன். இது பள்ளியில் இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.