நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்- சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் மேலும் ஒரு மாணவர் கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்- சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் மேலும் ஒரு மாணவர் கைது

கடந்த ஆண்டு நடைபெற்ற நீட்தேர்வில் முறைகேடாக தேர்வு எழுதி டாக்டர் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் பற்றிய தகவல் சமீபத்தில் தெரியவந்தது. தேனி மருத்துவ கல்லூரியில் ஆள்மாறாட்டம் மூலமாக தேர்வு எழுதிய மாணவர்கள் பற்றிய விவரங்கள் முதலில் வெளிச்சத்துக்கு வந்தது.இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி நீட்தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னையில் படித்து வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களையும் கைது செய்தனர்.

தமிழகத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் நீட்தேர்வு முறைகேட்டுக்காக வெளி மாநிலங்களை தேர்வு செய்து ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி மோசடியாக மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து இருந்தனர்.ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்களின் புகைப்படங்களை சி.பி.சி. ஐ.டி போலீசார் கடந்த வாரம் வெளியிட்டனர். 2 மாணவிகள் உள்பட 11 பேரை தேடி கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

நீட்தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 20 பேர் வரையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு மாணவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரியை சேர்ந்த அந்த மாணவர் சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். இவரும் ஆள்மாறாட்டம் மூலமாகவே மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து வருவது தெரியவந்துள்ளது.

நீட் முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில்தான் புதிதாக மேலும் ஒரு மாணவர் பிடிபட்டுள்ளார்.நீட் தேர்வில் முறைகேடாக தேர்வு எழுதுவதற்காக மாணவர்களின் பெற்றோர் ரூ.20 லட்சம் வரையில் பணத்தை வாரி இரைத்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள கிருஷ்ணகிரி மாணவரும் ஆள்மாறாட்டம் மூலமாக தனக்கு பதில் தேர்வு எழுதிய மாணவருக்கு லட்சக் கணக்கில் பணம் கொடுத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.