வங்கியில் சுரங்கப்பாதை தோண்டி ரூ.40 லட்ச மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!!

வங்கியில் சுரங்கப்பாதை தோண்டி ரூ.40 லட்ச மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!!

மும்பை: மும்பையில் 25 அடி சுரங்கப்பாதை தோண்டி ஒரு தேசிய வங்கியில் இருந்த 30 லாக்கர்களை உடைத்து சுமார் 40 லட்சம் மதிப்புள்ள பொருட்களை ஒரு கொள்ளை கும்பல் திருடிச்சென்றுள்ளது.

மராட்டிய மாநிலம் நவிமும்பை அருகில் ஜுனிநகர் பகுதியில் பரோடா வங்கிக்கு சொந்தமான ஒரு கிளை அமைந்துள்ளது. இந்த வங்கி இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் மீண்டும் நேற்று திறக்கப்பட்டது. அப்போது அந்த வங்கியின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சில பாதுகாப்பு பெட்டகங்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அருகில் இருந்த கடையில் இருந்து வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறை வரையில் சுமார் 25 அடி தூரத்திற்கு சுரங்கப்பாதை தோண்டி திருடர்கள் கொள்ளையடித்து சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.இந்த கொள்ளை சம்பவத்தில் வங்கியில் உள்ள 225 லாக்கர்களில் 30 லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த சம்வத்தில் திருடுபோன பொருட்களின் சரியான மதிப்பு குறித்து இன்னும் கணக்கிடப்படவில்லை.

அந்த வங்கியில் உள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமாவில் பார்ப்பதுபோல் சுரங்கப்பாதை தோண்டி வங்கி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.