ஸ்டேட் வங்கியில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பணம் கொள்ளை...!

ஸ்டேட் வங்கியில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பணம் கொள்ளை...!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் கள்ளிப்பாளையத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் கிளை உள்ளது.இங்கு இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தங்களது பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். மேலும் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வங்கி பூட்டப்பட்டு இருந்தது. இன்று காலை 10 மணிக்கு ஊழியர்கள் வங்கியை திறக்க வந்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது லாக்கர் உடைந்து கிடந்தது.

அதில் வைக்கப்பட்டு இருந்த நகைகள், பணம் கொள்ளை போய் இருந்தது. சுமார் 20 லட்சம் மதிப்புள்ள பணம் கொள்ளை போனதாக தெரிகிறது. நகைகளின் மதிப்பு உடனடியாக தெரியவில்லை.இந்த வங்கியில் இரவு காவலாளி இல்லை. இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் வங்கியின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து ஜன்னலின் இரும்பு கம்பியை வளைத்து உள்ளே சென்று நகை- பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

கொள்ளை போன நகைகளின் மதிப்பை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த துணிகர கொள்ளை குறித்து காமநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.பல்லடம் டி.எஸ்.பி. முருகவேல் மற்றும் காமநாயக்கன் பாளையம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்களும் வந்து தயடங்களை சேகரித்தனர்.

வங்கியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு இருந்தது. அதனையும் கொள்ளையர்கள் திருடி சென்று விட்டனர். முதலில் கண்காணிப்பு கேமிராவை திருடிய பின்னர் தான் ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே புகுந்து பணம்-நகையை கொள்ளையடித்துள்ளனர்.கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.கடந்த 3 மாதத்திற்கு முன் இதே வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.