உ.பி.யில் மர்மநபர்கள் வெறிச்செயல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடித்துக் கொலை..!

உ.பி.யில் மர்மநபர்கள் வெறிச்செயல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடித்துக் கொலை..!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இரு இளம்பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்ம கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள நவாப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த மக்கான் லால் குப்தா என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை குப்தா குடும்பத்தினருக்கும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் சிறிய தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று காலை குப்தா, அவரது மனைவி மற்றும் 19 மற்றும் 18 வயதுமிக்க இரு மகள்கள் உள்ளிட்ட நால்வரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர்.

பலியானவர்களின் உடல்களில் சரமாரியான தாக்குதல் காயங்கள் இருந்துள்ளன. மேலும், இரு இளம்பெண்களின் உடல்கள் அரை நிர்வாண நிலையில் கிடந்துள்ளன. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இந்த கோர சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.