சிவகாசியில் பரபரப்பு...ப்ளூவேல் கேம் விளையாடிய இளைஞர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

சிவகாசியில் பரபரப்பு...ப்ளூவேல் கேம் விளையாடிய இளைஞர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

சிவகாசி: சிவகாசி அருகே ப்ளூவேல் கேம் விளையாடிய 18 வயது இளைஞர், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகாசியை அடுத்த சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் 9ஆம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ளார். இவர் இன்று மாலை தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஜெகதீஷ் ப்ளூவேல் கேம் விளையாடி கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாகவே வீட்டில் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். 

ப்ளூவேல் விளையாட்டு அபாயகரமான விளையாட்டாக உள்ளது. இணையதளத்தில் இதனை விளையாடும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ரஷ்யாவில் தொடங்கிய ப்ளூவேல் கேம், உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது. 3000 பேர் வரை இந்த விளையாட்டினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த விளையாட்டின் 50 நிலைகளைக் கடந்து செல்பவர்கள், தற்கொலை செய்து மரணித்து விடுகின்றனர். தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து இதுபற்றி விழிப்புணர்வை காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகிகளும் மேற்கொண்டு வருகின்றனர். 

ப்ளூவேல் விளையாட்டு தொடர்பாக தவறான செய்திகளை ஆன்லைனில் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சிறுவர்களின் நடவடிக்கையை பெற்றோரும், ஆசிரியர்களும் உன்னிப்பாக கவனிக்க வேண்டு என்று டிஜிபி டி.கே. ராஜேந்திரன் எச்சரித்துள்ளார். ப்ளூவேல் விளையாட்டை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேவைப்படும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நம்பத்தகுந்த ஆதாரங்களின்றி ப்ளூவேல் கேம் குறித்த குறுந்தகவல்களை பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். 

ப்ளூவேல் தொடர்பான இணைப்புகளை பிறருக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். இந்த விளையாட்டு மூலம் பிறரை தற்கொலைக்கு தூண்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும். சிறார்கள் ப்ளூவேல் கேம் விளையாடுவது தெரிந்தால் இணையம் போன்றவற்றை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 12 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் ப்ளூவேல் விளையாட்டை அதிகம் விளையாடுகின்றனர். சிறார்களின் நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறதா என்று கண்காணிக்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த விளையாட்டு பற்றிய செய்திகள் வெளியாகாமல் இருந்தன. தற்போது சிவகாசியில் இளைஞர் ஜெகதீஷ் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.