புதிய பாடப்புத்தகங்களின் விலை 60 சதவீதம் உயர்வு...

புதிய பாடப்புத்தகங்களின் விலை 60 சதவீதம் உயர்வு...

தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த பாடபுத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.தனியார் பள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் பாட புத்தகங்களை விலைக்கு வாங்குகின்றன. பின்னர் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு விற்பனை செய்கின்றன.

2017-18 கல்வி ஆண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சீரமைக்கப்பட்டு பாட புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்த கல்வி ஆண்டுக்கான 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அச்சடித்து வெளியிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் விற்பனை வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.

இதற்கிடையே 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் விலை 60 சதவீதம் உயர்ந்து இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். 11-ம் வகுப்பு கணக்கு, வேதியியல், இயற்பியல் பாடப்புத்தகங்கள் இந்த ஆண்டு இரு மடங்குக்கு மேல் விலை உயர்ந்து இருக்கிறது.இது குறித்து தமிழ்நாடு பாடநூல் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், பாடப்புத்தகங்கள் மிக தரமான தாள்களில் அச்சடிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து பாடப்புத்தகங்களிலும் வரிகளுக்கு இடையே உள்ள இடைவெளிகள், படங்கள் ஆகியவை சீரமைக்கப்பட்டு இருக்கிறது என்றார்.

திருத்தப்பட்ட பாடப் புத்தகங்களின் வடிவமைப்புகளை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் முற்றிலும் மாற்றி அமைத்து இருக்கிறது. இதுகுறித்து தனியார் பள்ளி முதல்வர் ஒருவர் கூறும் போது, புதிய பாடப்புத்தகங்களின் விலை உயர்ந்து இருப்பது உண்மைதான். ஆனால் புத்தகங்கள் வண்ணமயமாகவும், மாணவர்களுக்கு பிடிக்கும் வகையிலும் உள்ளன என்றார்.