அடுத்த ஆண்டு கேட் தேர்வு எழுத 8.6 லட்சம் பேர் விண்ணப்பம்

அடுத்த ஆண்டு கேட் தேர்வு எழுத 8.6 லட்சம் பேர் விண்ணப்பம்

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கேட் தேர்வை எழுத 8.6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டெல்லி தொழில்நுட்பக் கழகம் தெரிவித்துள்ளது.கேட் (GATE) என்று அழைக்கப்படும் பொறியியல் பட்டதாரிகளுக்கான நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை இந்திய அறிவியல் கழகம் மற்றும் ஏழு இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் இணைந்து நடத்துகின்றன.

இத்தேர்வில் தகுதிபெற்றவர்கள் மனிதவள அமைச்சகத்தின் பல்வேறு  பட்டமேற்படிப்பு திட்டங்களில் சேரவும், நாட்டின் பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகள், தொழில்நுட்ப கழகங்களில் அரசு கல்விநிதி, உதவிகளை பெறவும் முடியும். மேலும் சில மத்திய அரசு நிறுவனங்களில் கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

சிங்கப்பூர், ஜெர்மனியில் உள்ள சில தொழில்நுட்பக் கழகங்களில் பட்டமேற்படிப்பில் சேர்வதற்கும் கேட் தேர்வு மதிப்பெண்கள் ஓர் அளவுகோலாக வைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் மிகவும் கடினமான தேர்வாக கேட் தேர்வு கருதப்படுகிறது.இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கேட் தேர்வுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து 8.6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டெல்லி தொழில்நுட்பக் கழகம் தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான கேட் தேர்வு பிப்ரவரி மாதம் 1, 2, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 25 பாடப்பிரிவுகளுக்கு நடத்தப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஒப்புதல் சீட்டு ஜனவரி 3 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.