வாகனங்களுக்கு தகுதிச்சான்று பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை...

வாகனங்களுக்கு தகுதிச்சான்று பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை...

தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந் தேதி திறக்கப்படுகிறது. பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக பள்ளி வாகனங்களில் செல்வதற்கு வசதியாக, பள்ளி வாகனங்கள் தகுதிச்சான்று பெறவேண்டும்.

அதன்படி, சென்னையில் உள்ள 628 பள்ளிக்கூட வாகனங்களை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் வெ.அன்புச்செல்வன் திட்டமிட்டார். இந்த நிலையில், நேற்று கொளத்தூரில் உள்ள டி.ஆர்.ஜே.ஆஸ்பத்திரி அருகே 196 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்காக அணிவகுத்து நின்றன.அந்த வாகனங்களை சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் ஆய்வு செய்தார். அப்போது, பள்ளி வாகனங்களில் படிக்கட்டுகள் தரமானதாக இருக்கிறதா? அவசர வழி உள்ளதா? டிரைவர் முறையாக பயிற்சி பெற்றுள்ளாரா? என ஆய்வில் ஈடுபட்டார்.

இந்த ஆய்வில் தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் ஆர்.ராஜேந்திரன், சென்னை வடமேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சி.ஸ்ரீதரன், சென்னை வடக்கு வட்டாரபோக்குவரத்து அலுவலர் க.அசோக்குமார் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர் சண்முகம் மற்றும் வாகன ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

ஆய்வு குறித்து கலெக்டர் வெ.அன்புச்செல்வன் கூறியதாவது:-

பள்ளிக்கூட வாகனங்கள் அனைத்தும் வருகிற 31-ந் தேதிக்குள் தகுதிச்சான்று பெறவேண்டும். அதற்காக கூட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அனைத்து பள்ளி வாகனங்களும் 31-ந் தேதிக்குள் தகுதி சான்று பெறாவிட்டால் அந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எத்தனை மாணவர்களை ஏற்றவேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதன்படி தான் நடக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், நேற்று 196 வாகனங்கள் ஆய்வுக்காக வந்தன. அவற்றில் 172 வாகனங்களில் அனைத்தும் சரியாக இருந்தன. அந்த வாகனங்களுக்கு தகுதிச்சான்றுகள் வழங்கப்பட்டது. மீதம் உள்ள 24 வாகனங்களில் உள்ள சில குறைகளை சரி செய்துவரும்படி கூறப்பட்டுள்ளது என்றார்.