என்ஜினீயரிங் படிப்பில் சேர இன்று கலந்தாய்வு தொடக்கம்...

என்ஜினீயரிங் படிப்பில் சேர இன்று கலந்தாய்வு தொடக்கம்...

சென்னை: என்ஜினீயரிங் படிப்பில் சேர தொழில் கல்வி பிரிவுக்கு இன்று (திங்கட்கிழமை) கலந்தாய்வு தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக். என்ஜினீயரிங் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டன. பின்னர், பதிவு செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைத்தனர். மொத்தம் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 21 பேர் விண்ணப்பங்கள் வரப்பெற்றிருந்தன. அதன் அடிப்படையில், தரவரிசை பட்டியல் கடந்த மாதம் (ஜூன்) 22-ந் தேதி வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பிரிவு வாரியாக கலந்தாய்வு நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டது. இன்றும், நாளையும் தொழில் கல்வி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு 19-ந் தேதி நடக்கிறது. மேலும், விளையாட்டு பிரிவு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 19, 20 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டு 21-ந் தேதி அவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து, 23-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வரை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்டு 16-ந் தேதி துணை கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். 17-ந் தேதி துணை கலந்தாய்வும், 19-ந் தேதி ஆதி திராவிடர், அருந்ததியர் ஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு கலந்தாய்வும் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 583 என்ஜினீயரிங் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 643 இடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அவற்றுள் தொழில் பிரிவு மாணவர்கள் மூலம் 6 ஆயிரத்து 224 இடங்கள் நிரப்பப்படுகிறது. பொதுப்பிரிவில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 419 மாணவர்கள் சேர்க்கபட உள்ளனர். தமிழகத்தில் உள்ள 583 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 204 இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெறும் தொழில் பிரிவு கலந்தாய்வில் உள்ள 6,224 இடங்களுக்கு தகுதியான 2 ஆயிரத்து 84 மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். காலை 10.30 மணிக்கு தொடங்கும் அந்த கலந்தாய்வு நாளை (18-ந் தேதி) மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. தொழில் பிரிவில் முதலாவதாக மாற்றுத்திறனாளிகள் அழைக்கப்படுகின்றனர்.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 23-ந் தேதி தொடங்குகிறது. அன்று மட்டும் காலை 10 மணி முதல் இரவு 6.30 மணி வரை மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர். அதனைத் தொடர்ந்து, தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர். தினமும் 9 பிரிவாக மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளதால், இந்தாண்டு முன்கூட்டியே கலந்தாய்வு முடிவுக்கு வரும் என தெரிகிறது.

ஒரே மாதிரி பெயர் கொண்ட கல்லூரிகள் பல உள்ளதால் அந்த கல்லூரியை தேர்வு செய்யும் முன் கல்லூரி குறியீட்டு எண், விலாசம் இவற்றை சரிபார்த்த பின் பாடப்பிரிவு மற்றும் கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும். மேலும், கல்லூரிகள் பற்றிய விவரங்களை (விடுதி போன்றவை) அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். கல்லூரி மற்றும் பாடப்பிரிவை ஒரு முறை தேர்வு செய்த பின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. எனவே, விண்ணப்பதாரர்கள் கவனமாக கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.

அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு, 2 மணி நேரத்திற்கு முன்னதாக கலந்தாய்வு அரங்கிற்கு வர வேண்டும். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் தங்களுக்கு எந்த கல்லூரியில் காலியிடங்கள் உள்ளது என்பதை அறிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

சுயநிதி தொழிற்கல்வி கட்டண நிர்ணயக்குழு 2017-18-ம் கல்வி ஆண்டில் இளங்கலை என்ஜினீயரிங் பாடப்பிரிவுக்கான கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளது. இந்த கட்டணத்தின்படி, தேசிய தர அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவிற்கு ரூ.55 ஆயிரமும், தேசிய தர அங்கீகாரம் பெறாத பாடப்பிரிவிற்கு ரூ.50 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு தேசிய தர அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவுக்கு ரூ.87 ஆயிரமும், தேசிய தர அங்கீகாரம் பெறாத பாடப்பிரிவிற்கு ரூ.85 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.