‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு நாளை கடைசி நாளாக தேர்வு முகமை அறிவித்துள்ளது.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2020-21-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 3-ந்தேதி நடைபெற உள்ளது.

தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 11 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்த உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் www.ntaneet.nic.in    என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க ஏற்கனவே டிசம்பர் மாதம் 31-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று, 6-ந் தேதி வரை நீட்டிப்பு செய்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாக தேர்வு முகமை அறிவித்துள்ளது.