பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு...தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு...தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்

தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர். மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர். வழக்கம் போல மாணவிகள் தான் அதிகம். தனி தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர். அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 

தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடந்தது. மீண்டும் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இப்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. இன்று பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. 

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேஏ செங்கோட்டையன், மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் பற்றிய தகவலை வெளியிட்டார். அப்போது, தமிழகம், புதுவையில் பிளஸ் டு பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. மாணவிகள் 94.1 சதவீதம், மாணவர்கள் 87.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

97 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. 96.3 சதவீத தேர்ச்சி விகிதத்துடன்  ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடம், 96.1 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், ஜூன் 25ல் மீண்டும் தேர்வெழுதலாம். தனியார் பள்ளிகளில் சிறந்த மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக் கூடாது. தனியார் பள்ளிகளில் சிறந்த மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக் கூடாது. மீறும் தனியார் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.