டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு- சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு- சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வுகளில் முறைகேடு செய்ததாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் முக்கிய புள்ளிகள் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால், சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்  என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மதுரை மேலூரைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் சிபிஐ, டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை மார்ச் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.