தமிழகத்தில் பள்ளி தேர்வுகளை ஏப்ரல் 12க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் பள்ளி தேர்வுகளை ஏப்ரல் 12க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கவிருப்பதையொட்டி, தேர்வுகளை ஏப்ரல் 12க்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கமிஷனும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தேர்வு குறித்து புதிய மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறும்  தேர்வுகளை வரும் ஏப்ரல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

வழக்கமாக அனைத்து தேர்வுகளும் ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரம் முடிவடையும். தற்போது மூன்றாம் பருவத் தேர்வுகளை ஏப்ரல் 1ல் துவங்கி ஏப்ரல் 12க்குள் முடிக்க வேண்டும். இதற்கான தேர்வு கால அட்டவணைகளை மாற்றி, முதன்மை பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்டங்களின் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். வேலை இழப்பு ஏற்படும் நாட்களை சரி செய்ய, சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்கலாம் என கூறப்பட்டுள்ளது.