ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்துக்கு நல்லது செய்வார் - கமல்

ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்துக்கு நல்லது செய்வார் - கமல்

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.அவர் ரஜினியுடன் இணைவார் என்று செய்தி பரவியது. இந்தநிலையில் கமல்ஹாசன் தி.மு.க. நடத்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. தி.மு.க.வுடன் கமல் கூட்டணி வைப்பார் என்று செய்தி பரவியது.ஆனால் போராட்டத்தில் கமல்ஹாசன் கட்சி கலந்து கொள்ளவில்லை. தி.மு.க.வுடன் கூட்டணி என்ற செய்திகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

ரஜினியும் கமலும் ரகசியமாக கூட்டணி வைத்து செயல்படுகிறார்கள் என்றும் என்ற ரீதியில் ஒரு செய்தி பரவியது. தன் மீது காவி சாயம் பூசப்படுவதாக ரஜினி பேட்டி அளிக்க கமலின் ஆலோசனை தான் காரணம் என்றும் தி.மு.க. போராட்டத்தில் இருந்து கமல் பின்வாங்க ரஜினியின் ஆலோசனை தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் நடந்த தனியார் நிகழ்வில் கலந்துகொண்ட கமல் கூறியிருப்பதாவது:-

ரஜினிகாந்த் இப்போது தமிழராகவே மாறிவிட்டார். எனவே தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். அவர் நிச்சயம் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார். அதற்கான சரியான முடிவையும் எடுப்பார்.நான் ஹேராம் படம் எடுத்தபோதே அரசியலுக்குள் நுழைந்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனால் அந்த படத்தை இப்போது உள்ள சூழ்நிலையில் எடுக்க முடியாது. கடும் எதிர்ப்புகள் வரும். இன்று நாடே பிரிவினை அரசியலுக்குள் சிக்கிவிட்டது.

திராவிட அரசியல் சரியான திசையை நோக்கி பயணிக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு இப்போது ஊழல் மிகுந்த மாநிலமாக மாறிவிட்டது. தலைமையில் மாற்றம் வராமல் இது மாற வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.