இந்தியன்-2 படம்தான் எனது கடைசி படம் - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

 இந்தியன்-2 படம்தான் எனது கடைசி படம் - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

‘இந்தியன்-2’ படம் தான் எனது திரையுலகப் பயணத்தின் கடைசி படமாக இருக்கும் என்றும், அதன் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் கமல்ஹாசன் கூறினார்.கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி மதுரையில் அவர் “மக்கள் நீதி மய்யம்” எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அன்றே அவர் தனது கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். 6 தென் மாநிலங்களைக் குறிக்கும் வகையில் 6 கைகள் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்த காட்சியுடன் கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அவர் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டார். மற்ற மாநில முதல்-மந்திரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவதையும் அவர் வழக்கத்தில் வைத்துள்ளார். சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் புரட்டி போட்ட போது தனது கட்சியினருடன் கமல்ஹாசன் அங்கு சென்று செய்த நிவாரண பணிகள் மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றது.

இதற்கிடையே கமல்ஹாசன் ஏராளமான மக்கள் நல அமைப்புகளுடனும் தொடர்பு வைத்துள்ளார். கேரளாவில் எர்ணாக்குளம் மாவட்டத்தில் “டூவண்டி 20 கிழக்கம்பாலம்” எனும் அமைப்பு சார்பில் கிழக்கம் பாலம் கிராமத்தில் ஏழை - எளியவர்களுக்காக கட்டப்பட்டுள்ள 300 வீடுகளை ஒப்படைக்கும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு ஏழைகளிடம் வீடுகளை ஒப்படைத்தார்.

அந்த கிராமத்து வீடுகளை அவர் சுற்றிப்பார்த்தார். “கடவுளின் கிராமம்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஊரில் உள்ள வீடுகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். பிறகு கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தனது எதிர்கால அரசியல் திட்டங்களை அவர் அறிவித்தார். அதன் விபரம் வருமாறு:-கேரளா மாநிலம் எனக்கு வீடு போன்றது. இத்தகைய விழாக்களில் கலந்து கொள்ளும்போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. இங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இந்த அருமையான திட்டத்தை தமிழ்நாட்டிலும் செயல்படுத்த நான் விரும்புகிறேன்.

அதற்கு உரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். செயல்படுத்தும் அதிகாரம் இல்லாமல் கனவு கண்டால், அந்த கனவுகள் வெறும் கனவுகளாகவே இருந்து விடும். எனவே மாற்றம் வேண்டும்.மக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழக மக்களுக்கு உண்மையான தேவைகள் தரப்படும். இதற்காகவே நான் மற்ற மாநில முதல்-மந்திரிகளை சந்தித்து ஆலோசனை பெறுகிறேன். அவர்கள் ஆளும் மாநிலத்தில், அவர்கள் செய்துள்ள நல்ல திட்டங்களைக் கேட்டு அறிந்து வருகிறேன்.

கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனை சந்தித்துப் பேசியுள்ளேன். ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசி உள்ளேன். அவர்களிடம் இருந்து சில நல்ல யோசனைகளை பெற்றுள்ளேன். அவற்றை அப்படியே தமிழ்நாட்டிலும் செய்ய வேண்டும்.தற்போது நான் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும். இந்தியன்-2 படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விடைபெற்று விடுவேன்.

நடிப்பில் இருந்து நான் ஒதுங்கிவிட்டாலும் எனது திரைப்பட நிறுவனம் தொடர்ந்து செயல்படும். எங்களது கட்சியை வழி நடத்த நிதி தேவைப்படுவதால் அதற்கு உதவும் வகையில் எனது திரைப்பட நிறுவனம் செயல்படும். மக்கள் நல திட்டங்களுக்கும் எனது திரைப்பட நிறுவனம் தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்.இந்தியன்-2 படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிந்ததும் எனது அரசியல் பணி முழு நேரமாக மாறும். பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்.

எதிர்காலத்தில் மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். மதம், சாதி மற்றும் பணத்தை பயன்படுத்தி மாசு ஏற்படுத்த முயற்சி செய்யும் அரசியல் கட்சிகளை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொள்வேன்.அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பலரும் பணம் சம்பாதிக்கவே வருகிறார்கள். தற்போதைய அரசியல் கட்சித் தலைவர்களில் பலரும் பணம் சாம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளனர். ஆட்சி, அதிகாரம் என்பது மாநில மக்களுக்கு நல்லது செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

சபரிமலை விவகாரத்தைப் பொருத்தவரை சாதாரண மக்களிடம் பேச்சுவார்த்தை மூலம் சமரசத்தை உருவாக்க வேண்டும். இதற்கு படை பலத்தை பயன்படுத்தக் கூடாது என்பது எனது கருத்தாகும். மீடூ இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். ஆனால் அது தனிப்பட்ட லாபத்துக்காக பயன்படுத்தப்பட கூடாது.இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறினார்.மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட பிறகு இப்போதுதான் கமல்ஹாசன் முதன் முதலாக தனது எதிர்கால திட்டங்களை வெளியிட்டுள்ளார். சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என்ற அவரது அறிவிப்பு அவரது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் அரசியல் ரீதியாக கமல்ஹாசன் தெரிவிக்கும் கருத்துக்கள் மற்ற கட்சிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.