கமல்ஹாசன் கட்சியில் 21-ந்தேதி வேட்பாளர் தேர்வு....

  கமல்ஹாசன் கட்சியில் 21-ந்தேதி வேட்பாளர் தேர்வு....

அடுத்த கட்டமாக 2021-ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலை நோக்கி அவர் அரசியல் வியூகம் அமைத்து வருகிறார். சட்டமன்ற தேர்தலே தங்களது இலக்கு என்று கூறிவரும் கமல்ஹாசன் சமீபத்தில் நடந்த இடைதேர்தல் எதிலும் போட்டியிடவில்லை. கமல்ஹாசன் கிராம சபை கூட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வந்ததால் உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதையும் புறக்கணித்துவிட்டார்.

சமீபத்தில் கட்சியின் பல்வேறு அணிகளுக்கு மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய அளவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அடுத்து கமல்ஹாசன் தனது முழு கவனத்தையும் சட்டசபை தேர்தலுக்கு மட்டுமே செலுத்த இருப்பதாக கூறுகிறார்கள். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:-

2021 சட்டசபை தேர்தலை மட்டும்தான் எங்கள் இலக்காக வைத்து செயல்படுகிறோம். இந்த மாத இறுதியில் பிரசாரத்தை தொடங்க இருக்கிறோம். இந்த பிரசார சுற்றுப்பயணத்துக்கு அடுத்த 55 வாரங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது. கட்சி தொடங்கிய பிப்ரவரி 21-ந்தேதி பிரசாரத்தை தொடங்குபவர் அடுத்த ஆண்டு ஜனவரியில் அதை நிறைவு செய்வார்.

இதற்காக பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கி ஜூன், ஜூலை மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பக்கம் பிரசாரமும் இன்னொரு பக்கம் படப்பிடிப்பும் நடக்குமாறு திட்டமிடப்படுகிறது. இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்த பிறகு கமல் அரசியலில் இன்னும் வேகம் எடுப்பார்.

கட்சியின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழாவை தலைவர் கமல் முக்கியமானதாக பார்க்கிறார். அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இந்த மாதம் முதலே தேர்தல் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளார். அதன்படி பிப்ரவரி 21-ந் தேதி தேர்தல் குழுவை அறிவிக்கிறார். 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு தேர்தல் குழுவை முதலில் மக்கள் நீதி மய்யம்தான் அறிவிக்க உள்ளது.

இந்தக் குழுவில் மாநில நிர்வாகிகள் மட்டுமல்லாது, சிறப்பாகப் பணியாற்றும் மாவட்ட நிர்வாகிகளும் இடம்பெறுவார்கள். இந்தக் குழுவில் இடம் பெறுபவர்கள் யார் என்ற தகவலைத் தலைமை ரகசியமாக வைத்துள்ளது. கட்சி தொடக்க விழா அன்று மாநிலம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சி இருக்கும். கமல்ஹாசன், சென்னை கட்சி அலுவலகத்தில் கொடியேற்றுவார்.

அதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்கள், கிராம, நகர்புற நிர்வாகிகள் அவர்கள் பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெறும். அன்று தேர்தல் தொடர்பாக மேலும் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும். அன்றைய தினம் முதல் 2021-ம் ஆண்டு தேர்தலுக்கான வேட்பாளர் விருப்பமனு பெறப்படும். அன்றே வேட்பாளர் தேர்வும் தொடங்கும்.

கமல் அனைத்து மாவட்டங்களிலும் கிராம, நகர வாரியாக மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். வேட்பாளர் தேர்வு முன்னதாகவே நடப்பதற்கு முக்கிய காரணம், வேட்பாளர்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதுதான். பெரும்பாலான வேட்பாளர்கள் மக்களுக்கு புதிதானவர்களாக இருப்பார்கள். அவர்கள் யார் என்பதை முன்னதாகவே முடிவு செய்யப்பட்டுவிட்டால், மக்களோடு மக்களாகக் களப்பணி ஆற்றத் தொடங்குவார்கள்.

இதன்மூலம் மக்களிடம் அவர்களால் எளிதில் சென்றடைய முடியும். எதிர்காலத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்பட்டால், அந்தத் தொகுதிகள் எங்கள் வேட்பாளர்களை விட்டுக்கொடுக்க வைக்கலாம். இந்த வி‌ஷயங்கள் விருப்பமனு பெறும்போதே அவர்களிடம் சொல்லப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.