காவிரி பிரச்சினையை யாராலும் தீர்க்க முடியாது- நடிகர் பிரகாஷ்ராஜ்

காவிரி பிரச்சினையை யாராலும் தீர்க்க முடியாது- நடிகர் பிரகாஷ்ராஜ்

கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியை எதிர்த்து நடிகர் பிரகாஷ்ராஜ் களம் இறங்கி உள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ் பிரதமர் மோடியையும், பா.ஜ.க.வையும் சமீப காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார். இவரது பேச்சு பாரதீய ஜனதா தொண்டர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக வட கர்நாடக பகுதியான பீஜாப்பூர், குல்பர்கா, கல்காம் உள்பட பல இடங்களில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு பிரகாஷ்ராஜ் குல்பர்காவில் பிரசாரத்தை முடித்து விட்டு காரில் பெங்களூரு சென்றார்.அப்போது பா.ஜ.க. தொண்டர்கள் அவரது காரை முற்றுகையிட்டனர். பிரகாஷ்ராஜூக்கு எதிராக அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினார்கள். அவரை காரை விட்டு இறங்குமாறு கூறினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேராட்டத்தில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சியினரை கைது செய்தனர். அதன் பிறகு பிரகாஷ்ராஜ் காரில் பெங்களூரு புறப்பட்டு சென்றார்.

இது குறித்து பிரகாஷ் ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் மிரட்டல்களுக்கு எல்லாம் நான் அஞ்சமாட்டேன். பாரதீய ஜனதாவுக்கு எதிராக தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடுவேன். காவிரி பிரச்சினையை எந்த அரசியல் கட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்சிகள் காவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வருகிறது.பல நாடுகளில் பாயும் நைல்நதியின் நீர் எந்தவித சிக்கலும் இல்லாமல் பிரிக்கப்படுகிறது.

இதேபோல காவிரி நீரை நாம் பிரித்துக்கொள்ள முடியாதா? இந்த வி‌ஷயத்தில் தமிழக - கர்நாடக மாநில மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். காவிரி பாசன பகுதிகள் மிகவும் மோசமாக உள்ளது. காடுகளும், மலைகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆற்று மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் தடுக்காமல் காவிரி பிரச்சினையை தீர்த்து வைக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.