கட்சியின் பெயர், கொடி குறித்து ரஜினி தீவிர ஆலோசனை...

 கட்சியின் பெயர், கொடி குறித்து ரஜினி தீவிர ஆலோசனை...

ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து பேசினார். இதற்கான உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்டம் தோறும் ரஜினி ரசிகர்கள் அதிக உறுப்பினர்களை சேர்ப்பதில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

பெண்கள் அதிக எண்ணிக்கையில் சேர்க்க வேண்டும் என்று ரஜினி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வீடு வீடாக சென்று ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவங்களை கொடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி இன்று மன்ற நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். அப்போது சில மாவட்டங்களில் உறுப்பினர் சேர்க்கை மந்தமாக இருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் இன்னும் வேகமாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளிடம் ரஜினி கேட்டுக் கொண்டார்.கட்சியின் பெயர், கொடி போன்றவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ரஜினியும் தமிழ்நாடு முழுவதும் சுற்று பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதுபற்றியும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

ஏற்கனவே ரஜினி மக்கள் மன்றத்திற்கு வேலூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்றும், நாளையும் கோவை மாவட்ட நிர்வாகிகள் பற்றிய ஆலோசனை நடைபெறுகிறது.இதுபோல் மற்ற மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமிக்கவும், புதிய கட்சி தொடங்குவதற்கான பணிகளை ரசிகர்கள் இன்னும் உற்சாகமாக ஈடுபடுவதற்கும் வேண்டிய ஆலோசனை ரஜினி வழங்கினார்.