போதையில் கார் ஓட்டிய நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் 6 மாதத்துக்கு ரத்து.. கோர்ட் அதிரடி

போதையில் கார் ஓட்டிய நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் 6 மாதத்துக்கு ரத்து.. கோர்ட் அதிரடி

சென்னை: குடிபோதையில் கார் ஓட்டிய நடிகர் ஜெய் விபத்து ஏற்படுத்தியதை ஒப்புக் கொண்டதால் அவருக்கு ரூ.5200 அபதாரம் விதித்த நீதிபதி 6 மாதத்துக்கு அவர் கார் ஓட்டமுடியாதபடி அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தார். 

அடையாறு மேம்பாலத்தில் கடந்த மாதம் 21ஆம் தேதி அதிகாலையில் குடிபோதையில் தனது ஆடி காரை ஓட்டிச்சென்றார் நடிகர் ஜெய். அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த அவர் பாலத்தின் மீது மோதினார். இந்த விபத்தில் காயமின்றி உயிர் தப்பினார் ஜெய். குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை 3-ஆம் தேதி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அவர் ஆஜராகவில்லை. மேலும் 5-ஆம் தேதியாவது ஆஜராகுமாறு மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதற்கு அவர் ஆஜராகாமல் போக்கு காட்டி வந்தார். இந்நிலையில் இன்னும் 2 நாள்களில் அவர் ஆஜராகாவிட்டால் அவரை கைது செய்யுமாறு காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் ஜெய் இன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் நீதிபதி ஆபிரஹாம் சரமாரியான கேள்விகளை கேட்டார். வாழ்க்கையையும் சினிமாபோல் நினைத்தீர்களா என நடிகர் ஜெய்யிடம் நீதிபதி ஆபிரஹாம் காட்டமாக கேட்டார். இதைத் தொடர்ந்து மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதை ஒப்புக் கொண்டார் நடிகர் ஜெய். இதைத் தொடர்ந்து அவருக்கு ரூ.5200-ஐ அபராதமாக விதித்த நீதிபதி, அவரது ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்டார். இனி 6 மாதங்களுக்கு நடிகர் ஜெய் குடிக்காவிட்டாலும் கூட கார் என்ன பைக் கூட ஓட்ட முடியாது.