நடிகர் சிம்பு வீட்டுக்கு போலீஸார் திடீர் பாதுகாப்பு...

நடிகர் சிம்பு வீட்டுக்கு போலீஸார் திடீர் பாதுகாப்பு...

சென்னை: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளின் பாதங்களை எடுத்துக் கூறும் வகையில் சிம்பு பாடல் பாடியுள்ளதால் அவரது தி.நகர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி உயர் ரக மதிப்பு நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இது கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ற போதிலும் அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் பாமர மற்றும் சாதாரண மக்கள்தான்.இந்நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு ஆனதை பாஜகவினர் கொண்டாடினர். அதேவேளையில் எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அனுசரித்தனர்.

கடந்த ஓராண்டாக பணமதிப்பிழப்பால் மக்கள் சந்தித்து வந்த பிரச்சினைகள் குறித்து தட்றோம் தூக்றோம் என்ற படத்தில் நடிகர் சிம்பு பாடலாக பாடியுள்ளார்.
அதற்கு பணமதிப்பிழப்பு கீதம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுத சிம்பு தனது சொந்த குரலில் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே மெர்சல் திரைப்படத்தில் வந்த ஜிஎஸ்டி குறித்த காட்சிகளுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததை போல் இந்த பாடலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் தி.நகரில் உள்ள சிம்புவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மெர்சல் படத்தின் ஜிஎஸ்டி குறித்த வசனங்களால் அந்த படம் வெளியாவதற்கு முன்பே மக்களிடம் ஆர்வத்தை தூண்டியதும் அது வெளியான பிறகு அப்படத்துக்கு கிடைத்த ஆதரவும் நினைவுக்கூரத்தக்கது.