நடிகர் வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க திடீர் தடை!

 நடிகர் வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க திடீர் தடை!

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்து ஹிட் அடித்த இம்சை அரசன் 23 -ம் புலிகேசி படத்தைத் தொடர்ந்து அதன் 2- ம் பாகத்தை இயக்க சிம்புதேவன் முடிவு செய்தார்.

இம்சை அரசன் 24 -ம் புலிகேசி என்ற பெயரில் இப்படத்தை தயாரிக்க இயக்குநர் சங்கர் திட்டமிட்டார். மேலும் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வடிவேலு ஒப்பந்தமானார். படத்திற்காக பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டது. படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடைபெற படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

வடிவேலுவின் இந்த நடவடிக்கையால் படத்தின் தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த விவகாரத்தில் நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க வேண்டும் அல்லது படத்துக்காக செலவழித்த தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கூறியது. இதை முதலில் மறுத்த வடிவேலு, பிறகு நடிக்க சம்மதித்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. படத்துக்கு செலவழித்த தொகையை திருப்பி கொடுக்கவேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கூறியதற்கு வடிவேலு தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிரச்னையை முடிக்கும் வரை வடிவேலுவை வைத்து எந்த ஒரு தயாரிப்பாளரும் படம் எடுக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் வடிவேலு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், ``இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க 1.6.2016-ல் ஒப்புக் கொண்டேன். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் படத்தை முடித்துவிடுவதாகவும், அதுவரை வேறு எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால், வேறு படங்களில் நடிப்பதை நான் தவிர்த்தேன். ஆனால் 2016 டிசம்பர் வரை படத்தை தொடங்காமலேயே காலம் தாழ்த்தினர். இருந்தாலும் தயாரிப்பாளர் மற்றும் சினிமா தொழிலாளர்களின் நலன் கருதி அதன் பிறகும் பல்வேறு தேதிகளில் நான் நடித்துக் கொடுத்தேன்.

இதனிடையே என்னுடைய ஆடை வடிவமைப்பாளரை எஸ்பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கியது. அதுமட்டுமின்றி என்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தை கொடுத்து, எனக்கு இந்தப் படத்தின் மூலம் மட்டும்தான் சினிமாவில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கினர். நான் நடித்துத் தர மறுத்திருந்தால் ஏன் பட நிறுவனம் 2016-ம் ஆண்டில் என் மீது புகார் தரவில்லை. இந்தப் படத்தினால் 2016-17-ம் ஆண்டுகளில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தேன். அதனால் எனக்கு பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் ஏற்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.