ஆரோக்கிய வாழ்வு தரும் ஆயுர்வேதம்...!

ஆரோக்கிய வாழ்வு தரும் ஆயுர்வேதம்...!

நோய் நாடி நோய் முதல் நாடி என்று கூறுகிறது திருக்குறள். நோய் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். நோயிற்கான காரணத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது பொருள். நோய்க்கான காரணத்தை அறிவதே நோயினை குணப்படுத்துவதற்கான முதற்படி.ஒவ்வொரு சிகிச்சை முறையும், ஒவ்வொரு தத்துவம் வைத்திருக்கின்றன. நோய்க்கான காரணத்தை அறிய! எடுத்துக்காட்டாக, ஆங்கில மருத்துவம், பேக்டிரியா, பூஞ்சை காளான், வைரஸ் போன்ற கிருமிகளை நோய்க்கு காரணமாக சொல்கிறது. ஆகவே இக்கிருமிகளை அழிப்பதற்கான மருந்துகளை உருவாக்குகின்றனர்.

முதுகு தண்டின் வடிவமைப்பில் ஏற்படும் மாறுதல்கள் அல்லது முதுகுத்தண்டில் உள்ள எலும்புகளின் தாறுமாறான செயல்பாடுகள், நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதே நோய்க்கு காரணம் என்று கைரோப்ராக்டீஸ் கூறுகிறது. இந்த மாறுதல்களை சரி செய்து, நரம்புகள் சரியாக வேலை செய்ய, வழிகளை ஏற்படுத்துவதே இவர்களது சிகிச்சை.

நாம் நமது சுற்றுச்சூழலுடன் இயைந்து வாழாமல் இருப்பதே நோயின் தொடக்கம் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. நாம் நமது புலன்கள், பொறிகள் மூலம் எடுக்கும் தவறான நுகர்வுகளால் உடல் பலவீனமடைந்து, நோய் வரும் சூழல் உருவாகிறது. இச்சூழலில் கிருமிகள் விரைந்து வளர்கின்றன. நமது உடலின் சக்தி ஓட்டம் தடைப்படுகிறது. 

சூழலுடன் இயைந்து போகாததுதான் நோய் என்றால், சூழலுடன் இயைந்து போக வைப்பது தான் சிகிச்சை முறை. இதுவே ஆயுர்வேதம் சொல்வது. ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை பெறும்போது ஐந்து புலன்களும் சிகிச்சையில் பங்கேற்கின்றன. முறையான உணவு, மூலிகை மருந்து ஆகியவற்றால் சுவையும், இசை மற்றும் சப்தங்களால் சப்தமும், முறையான நிறம் மற்றும் அழகினால் பார்ப்பதும், மூலிகை எண்ணெய் மசாஜ் ஆகியவற்றால் தோல் பங்கேற்பதும் அரோமாதெரபியால் வாசனை நுகர்வதும் நிகழ்கின்றது.இதுதவிர கழிவுகளை முறையாக வெளியேற்றுவதும் முக்கியமாக சொல்லப்படுகிறது. பஞ்சகர்மா போன்ற சிகிச்சை முறைகள் இதற்காக மேற்கொள்ளப்படுகின்றன.

ஆயுர்வேத முறைப்படி, எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை இருக்காது. ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொரு மாதிரியான சக்தி இருக்கும். இதனை உடல் இயல்பு என்பர். ஒவ்வொரு தனிமனிதனின் உடல் இயல்பு பற்றி தெரிந்து கொண்டு அதற்கேற்ற சிகிச்சை முறை தேர்ந்தெடுக்கப்படும். எடுத்துக்காட்டாக அதிக காரமும், மசாலா பொருட்களும் கொண்ட உணவை சிலர் உண்பர். வேறு சிலருக்கு அதே உணவு செரிமான கோளாறையும், வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தும். இதையெல்லாம் தெரிந்து மருத்துவர் தனிப்பட்ட ஒருவருக்கு ஏற்ற உணவு, மருந்து ஆகியவற்றை பரிந்துரைப்பார்.

ஆயுர் வேதப்படி, ஆரோக்கிய வாழ்வு முறை என்பது உடலை தாண்டி, ஓய்வு, மன அமைதி ஆகியவற்றையும் முக்கியமாக கொள்ள வேண்டும் என்பதே! இதற்காக தியானம், யோகா ஆகியவற்றை சொல்கிறது. இவை மன அழுத்தம் குறையவும், நோய் எதிர்ப்பு சக்தி சரிவர இயங்கவும் உதவுகின்றன.
சமநிலையில் இருந்து மாறுபட்ட தோஷங்களை, அதனுடைய தோற்ற இடத்தில் இருந்து அகற்றுவதே ஆயுர்வேத முறையாகும். ஆகவே நோயின் கூறுகளையும், அதன் ஆரம்ப கட்ட இடத்தையும் அறிவது தேவையாகிறது.

* பெரும்பாலான நோய்கள் ஆமம் எனப்படும் நிலையில் இருந்து தொடங்குகின்றன. சமைக்காத, செரிமானம் ஆகாத பொருட்களால் உண்டாவதே ஆமம் எனப்படும். அவை நச்சுக்களை உடல் முழுதும் பரப்புகின்றன. ரத்தம் மற்றும் உடல் முழுவதும் பயணிக்கிற பிற திரவங்கள் மூலம் பரவுகின்றன.

* சில நோய்கள், உணவு குழல், மூச்சுக் குழல் வழி பரவுகின்றன.

* சில நோய்கள் எலும்புகள், மூட்டுக்கள், முக்கிய உறுப்புகள் வழியே பரவுகின்றன.

* சில நோய்கள் ரத்தக்குழாய்கள், நிணநீர் மண்டலம் வழி பெருகுகின்றன.

* நேரம் தவறிய, முறையற்ற உணவு முறைகளால் மலச்சிக்கலில் இருந்து புற்றுநோய் வரை நோய்கள் வருகின்றன.

* வயிறு சரிவர இயங்காத போது செரிமான கோளாறில் தொடங்கி ஆமவாதம், முடக்கு வாதம் வரை வருகின்றன.

* பெருங்குடல் சரிவர இயங்காதபோது மூலம் பவுத்திரத்தில் ஆரம்பித்து, குடல்வீக்கம், புற்றுநோய் வரை வருகின்றன.

ஆயுர்வேதத்தில் பயன்படும் மருந்துகளும் திரிதோஷ அடிப்படையில் அமைந்தவையே. இம்மருந்துகள் நச்சுத்தன்மை இல்லாதவை. டானிக் ஆக செயல்படுபவை. நோய் வராமல் தடுக்கும். நோய் வந்துவிட்டால் குணப்படுத்தும். மனமும், உடலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்றுடன் ஒன்று சார்ந்தவை. அதை கருத்தில் கொண்டே மருந்து, உணவு முறை, வாழ்க்கை முறை ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன.