கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு... சுற்றுலா பயணிகள் சிக்கித் தவிப்பு

கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு... சுற்றுலா பயணிகள் சிக்கித் தவிப்பு

கேரளாவின் அழகிய சுற்றுலாத்தலமான மூணாறில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவினால் வெளியேற முடியாமல் சுமார் 80 பயணிகள் சிக்கி தவிக்கின்றனர். 

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய சுற்றுலாத்தலமான மூணாறு, பசுமை நிறைந்த தேயிலை தோட்டம் மற்றும் ஆர்ப்பரித்து கொட்டும் மலையருவிகளுக்கு பேர்போன இடமாகும். இந்த இயற்கை எழிலை ரசிப்பதற்காக உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

சமீபத்தில் கேரள மாநிலம் முழுவதும்  பெய்த கனமழை இடுக்கி மாவட்டத்தின் பல பகுதிகளை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. குறிப்பாக, மூணாறு பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.வெள்ளநீர் பாய்ந்து ஓடிய பல பகுதிகளில் மண் அரிப்பு காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவினால் சாலைகளை இணைக்கும் பாதைகளில் பிளவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று இடுக்கியில் உள்ள செருத்தோனி அணைக்கட்டில் 5 மதகுகளும் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்துள்ளது.

இதனால், மூணாறு பகுதிக்கு சுற்றுலா சென்ற 20 வெளிநாட்டினர் உள்பட சுமார் 80 பேர் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து அங்கு மழை பெய்துவரும் நிலையில் அவர்களை அங்கிருந்து மீட்க பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவம் விரைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மழை மற்றும் நிலச்சரிவில் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.