மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

 மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

கிராமப்புறங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் வரையறுத்துள்ள விதிமுறைகளை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவர் அலுவலர்கள் சங்கம் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.அதில் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நடத்த உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குரியன் ஜோசப், சந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி இதை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் தலைமை நீதிபதியின் முன்பு முறையீடு செய்து விரைந்து விசாரிக்க கோரிக்கை விடுக்கலாம் எனவும் உத்தரவிட்டனர்.

இதன் அடிப்படையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு தமிழ்நாடு மருத்துவர் அலுவலர்கள் சங்கம் உள்ளிட்டோர் தரப்பில் இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விரைந்து விசாரிக்கவேண்டும் என்று முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, ஏற்கனவே ஆதார் வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வு நாளை (இன்று) இதனை முதல் வழக்காக விசாரிக்கும் என்று உத்தரவிட்டார்.