சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து டெல்லியில் தர்ணா...!

சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து டெல்லியில் தர்ணா...!

   
மானியமில்லாத கியாஸ் சிலிண்டர்களின் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி அன்று வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தை பொருத்து ஏற்றம், இறக்கம் இருக்கும்.

இந்த மாதத்துக்கான கியாஸ் விலை நேற்றுமுன் தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி வீட்டு உபயோகத்திற்கான மானியம் அல்லாத கியாஸ் சிலிண்டர் (14 கிலோ) விலை ரூ.147 உயர்ந்துள்ளது. கடந்த மாதம் (ஜனவரி) கியாஸ் சிலிண்டர் விலை ரூ.734 ஆக இருந்தது. தற்போது ரூ.147 உயர்ந்து ரூ.881-க்கு விற்கப்படுகிறது. கடந்த 6 மாதங்களில் மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.290.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் மானியமில்லாத கியாஸ் சிலிண்டர்களின் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள டெல்லி சாஸ்திரி பவன் கட்டிடம் முன்பு காங்கிரஸ் பெண்கள் அணியினர் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் அணியின் தலைவி சுஷ்மிதா தேவ் உள்பட பல பெண்கள் கலந்து கொண்டனர். 

செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்காரர்கள், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறையும் போது அரசாங்கம் ஏன் மக்களிடமிருந்து பெரும் தொகையை எடுத்துக்கொள்கிறது என்று கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விலையேற்றத்தை அரசு திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்துவதாகவும் கூறினர்.