கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலி - 10 பேர் மாயம்

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலி - 10 பேர் மாயம்

ஆந்திரப்பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணத்திலிருந்து கொண்டமொதலு நோக்கி நேற்று முன்தினம் மாலை ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகில் ஒரு திருமண வீட்டார் உட்பட 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. கோதாவரி ஆற்றில் படகு சென்று கொண்டிருந்த போது கடும் மழையுடன் காற்று வீசியுள்ளது. இதனால் படகு ஆற்றில் கவிழ்ந்தது.

படகில் பயணித்த சிலர் பேர் நீந்தி கரை திரும்பிய நிலையில், பிறரை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகின்றன. இதுவரை 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதோடு, 10 பேர் மாயமாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆறு பேரின் உடலை மீட்புப்படையினர் மீட்டனர். அந்த படகை மீட்புப்படையினர் ஆற்றில் இருந்து கிரேன் மூலம் வெளியே எடுத்தனர். அதில் 8 பேரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் 10 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை எனவும், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்புப்பணிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று பார்வையிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். உடனடியாக ரூ.1 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.