ஆந்திராவில் என்.டி.ஆர் பெயரில் 5 ரூபாய் சாப்பாடு கேன்டீன் தொடக்கம்...!

ஆந்திராவில் என்.டி.ஆர் பெயரில் 5 ரூபாய் சாப்பாடு கேன்டீன் தொடக்கம்...!

தமிழ்நாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்க அம்மா கேன்டீன்களை திறந்தார்.அதேபோல் ஆந்திராவில் மறைந்த முதல்வர் என்.டி. ராமராவ் பெயரில் மலிவு விலை உணவு கேன்டீன்கள் திறக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார். ஆந்திராவில் என்.டி. ராமராவ் அன்பாக ‘அண்ணா’ என்று அழைக்கப்படுகிறார்.

இதையடுத்த அண்ணா கேன்டீன்கள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்காக ஆந்திர அரசு அதிகாரிகள் தமிழகத்துக்கு வந்து அம்மா உணவகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து சென்றனர்.இதையடுத்து ஆந்திராவில் அண்ணா கேன்டீன்கள் தொடங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. ஆந்திரா தலைநகர் அமராவதியில் தலைமை செயலகத்தில் 2016-ம் ஆண்டு அண்ணா கேன்டீன் தொடங்கப்பட்டது.

மாநிலத்தில் மற்ற பகுதிகளில் தொடங்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வந்தன.இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் 60 அண்ணா கேன்டீன்கள் முதல்கட்டமாக நேற்று தொடங்கப்பட்டது. விஜயவாடாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘அண்ணா’ கேன்டீனை தொடங்கி வைத்து உணவு சாப்பிட்டார்.

இங்கு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேலைகளிலும் சாப்பாடு ரூ.5 மலிவு விலையில் வழங்கப்படுகிறது.அண்ணா கேன்டீன் திறந்தது குறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், “இந்த கேன்டீன்களில் தூய்மை, சுகாதாரம், தரம் ஆகியவை சிறப்பாக இருக்கும். சர்வதேச அளவில் உள்ள ரெஸ்டாரண்ட்கள் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு பராமரிக்கப்படும். இந்த திட்டத்துக்கு பலதரப்பினர் ஆதரவு தரவேண்டும்” என்றார்.

இதற்கிடையே அண்ணா கேன்டீன்களுக்காக பலர் பணமாகவும், காய்கறிகளாகவும் நன்கொடை அளித்து வருகிறார்கள்.