பெரும் விபத்தை தவிர்த்து 261 பயணிகளின் உயிரை காப்பாற்றிய பெண் விமானி அனுபமா கோஹ்லி

பெரும் விபத்தை தவிர்த்து 261 பயணிகளின் உயிரை காப்பாற்றிய பெண் விமானி அனுபமா கோஹ்லி

டெல்லி: மும்பையில் வானில் பறந்து கொண்டிருந்த இரு விமானங்கள் ஒரே உயரத்தில் எதிரெதிர் திசையில் பயணம் செய்தபோது பெரும் விபத்து நடப்பதிலிருந்து ஏர் இந்தியா பெண் விமானி சாதுர்யமாக விமானத்தை இயக்கி 261 பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார். ஏர் இந்தியா விமானத்தை சேர்ந்த விமானம் மும்பையிலிருந்து போபாலுக்கும், விஸ்டாரா நிறுவனத்தின் விமானம் ஒன்று டெல்லியிலிருந்து புனேவுக்கும் கடந்த புதன்கிழமை (பிப்.7) சென்றன.

இரு விமானங்களிலும் 261 பேர் பயணம் செய்தனர். பொதுவாக விமானங்கள் எதிர் எதிர் திசையில் பறப்பதை தவிர்க்க விமானங்கள் இந்த உயரத்தில் பறக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல்கள் வரும். விமானிகளும் அதற்கேற்ப தங்களது விமானம் பறக்கும் உயரத்தை மாற்றி அமைத்து கொள்வர்.ஆனால் விஸ்டாரா நிறுவனத்தின் விமானம் 29,000 அடியில் பறந்து கொண்டிருந்த நிலையில் திடீரென 27,100 அடிக்கு உயரத்தை குறைத்தது.

அப்போது அதே 27,100 அடி உயரத்தில் ஏர் இந்தியா விமானமும் எதிரே வந்தது.விமானத்தை பெண் இணை விமானி அனுபமா கோஹ்லிதான் இயக்கினார். அப்போது விஸ்டாரா விமானம் தனது அருகில் வந்ததை அனுபமா கவனித்தார். இந்த உயரத்தில் ஏன் வந்தீர்கள் என்று விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கேட்டதற்கு நீங்கள்தான் வரசொன்னீர்கள் என்று விஸ்தாரா விமானி தெரிவித்தார்.

இதையடுத்து அனுபமா தனது விமானத்தை உயரத்தில் பறக்க வைத்தார். இதனால் விஸ்டாரா விமானத்துக்கு ரூட் கிளியர் ஆனது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 261 பேரின் உயிரை காப்பாற்றிய பெண் விமானியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.