நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம்

 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் நவீன் ஜிண்டால் உள்ளிட்டோருக்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை அளிக்காத சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ஜார்கண்ட் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலக்கரி சுரங்க உரிமங்கள் விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான ஒரு வழக்கில் டெல்லி தொழில் அதிபா் நவீன் ஜிண்டால் உள்பட சிலர் மீது குற்றப்பத்திரிகை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு குற்றப்பத்திரிகை நகலை அளிக்க கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி ஆவணங்களை சிபிஐ அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கு  நீதிபதி பரத் பராசர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதியிடம், சிபிஐ தரப்பில் எந்த ஆவணங்களும் அளிக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, சிபிஐ அமைப்பை கடுமையாக கண்டித்தார். நீதிமன்ற உத்தரவுபடி சிபிஐ செயல்பட வேண்டும்.  ஆவணங்கள் மீதான ஆய்வு செய்யும் பணி ஏப்ரல் மாதம் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.