அதிதீவிர புயலாக வலுப்பெற்ற புல்புல் புயல்- மேற்கு வங்கம், ஒடிசாவில் கனமழை

அதிதீவிர புயலாக வலுப்பெற்ற புல்புல் புயல்- மேற்கு வங்கம், ஒடிசாவில் கனமழை

வங்கக் கடலில் உருவான ‘புல்புல்’ புயல் அடுத்த வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை நோக்கி சென்றது. இன்று காலை அதிதீவிர புயலாக வலுப்பெற்று, கிழக்கு-மத்திய வங்கக்கடலில் மையம் கொண்டிருந்தது. அதன்பின்னர் மணிக்கு 27 கிமீ வேகத்தில், வடக்கு-மேற்கு திசை நோக்கி நகர்ந்தது. 

இதன் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக கடலோர ஒடிசாவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக புரி, ஜகத்சிங்பூர், கேந்திரபாரா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்பட்டுள்ளது.மதிய நிலவரப்படி பிரதீப் நகரில் இருந்து 310 கிமீ தொலைவில் இருந்த புயல், மேலும் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை கடந்து வங்கதேச கடலோர பகுதிகளை நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளதாக புவனேஸ்வர் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பிஸ்வாஸ் கூறி உள்ளார்.

இதனையடுத்து ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் மழையை சமாளிக்க முழு அளவில் தயார் நிலையில் இருக்கும்படி அரசுத்துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக, தேசிய பேரிடர் மீட்பு படை, ஒடிசா பேரிடர் அதிவிரைவு மீட்பு படை மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தயார்நிலையில் உள்ளனர்.

‘தற்போது 13 கிமீ வேகத்தில் நகரும் புல்புல் புயல், நாளை மேலும் வலுவடையும். ஆனால் ஒடிசாவில் கரைகடக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மற்றும் வடக்கு மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும். புயல் வடகிழக்கு நோக்கி மீண்டும் வளைந்து, ஞாயிற்றுக்கிழமை  மேற்கு வங்கம், வங்கதேச கடற்கரைகளை கடந்து செல்லும். அப்போது மணிக்கு 110 கிமீ முதல் 120 கிமீ வரை வேகத்தில் சூறைக்காற்று வீசும். கடற்கரையை கடக்கும்போது 135 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது’ என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பிஸ்வாஸ் தெரிவித்தார்.