பெருகி வரும் செல்போன் வழி பண பரிமாற்றத்தால் குறையும் ஏ.டி.எம். பயன்பாடு...!!

 பெருகி வரும் செல்போன் வழி பண பரிமாற்றத்தால் குறையும் ஏ.டி.எம். பயன்பாடு...!!

புதுடெல்லி: ஏ.டி.எம். பயன்பாடு 4 ஆண்டுகளில் குறைந்து விடும் எனவும் செல்போன் வழியிலான பண பரிமாற்றம் பெருகி விடும் எனவும் நிதி ஆயோக் அமைப்பின் தலைவர் அமிதாப் காந்த் தெரிவித்தார்.

நமது நாட்டின் பொருளாதாரம், முறையான பொருளாதாரமாக மாறுவதற்கு காகித பண புழக்கத்தை குறைத்து, ஆன்லைன் பண பரிமாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பது தற்போது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது.இது குறித்த விழிப்புணர்வையும், கல்வியையும் நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், மத்திய திட்ட கமிஷனுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் அமைப்பின் தலைவர் அமிதாப் காந்த் கூறியதாவது:-

நமது நாட்டின் மக்கள் தொகையில் 72 சதவீதத்தினர், 32 வயதுக்கு கீழே உள்ளவர்கள். இது அமெரிக்கா, ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில் நமக்கு மிகவும் சாதகமான அம்சம் ஆகும்.அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் நமது நாட்டில் கடன் அட்டைகள் (கிரெடிட் கார்டுகள்), பற்று அட்டைகள் (டெபிட் கார்டுகள்), தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்கள் (ஏ.டி.எம்.) பயன்பாடு மிகவும் குறைந்து விடும்.

எந்தவொரு பண பரிமாற்றத்துக்கும் நாம் செல்போன்களை பயன்படுத்த தொடங்கி விடுவோம்.உலகிலேயே நமது நாட்டில்தான் 100 கோடி பயோமெட்ரிக், அவ்வளவு அதிகமான மொபைல் போன்கள், வங்கிக்கணக்குகள் உள்ளன. எனவே இனி வரும் காலத்தில் நிறைய தடைகளை ஏற்படுத்தக்கூடிய நாடாக இந்தியா இருக்கும். கூடுதலான பண பரிமாற்றங்கள் செல்போன் வழியாக நடைபெறும். இப்போதே அதிரடியாக இந்த போக்கு அதிகரித்து வருகிறது.