மத்திய பட்ஜெட் ஆலோசனையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் ஆலோசனையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் தொடர்பான ஆலோ சனையை நிர்மலா சீதா ராமன் தொடங்கினார். விவசாய துறை பிரதிநிதிகளின் யோசனைகளை அவர் கேட்டறிந்தார்.பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து, நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் அமைந்துள்ளது. இதில், மத்திய நிதி மந்திரியாக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார்.புதிய மக்களவை கூட்டத்தொடர், 17-ந் தேதி தொடங்குகிறது. இதில், புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றுக்கொள்ளுதல், சபாநாயகர் தேர்தல் ஆகியவை நடைபெறுகிறது.

தேர்தலுக்கு முன்பு, நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டது. எனவே, முழுமையான பட்ஜெட், இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது.பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பல்வேறு துறை பிரதிநிதிகளை அழைத்துப்பேசி ஆலோசனை நடத்துவது நிதி மந்திரியின் வழக்கம்.

எனவே, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று இந்த ஆலோசனை கூட்டத்தை தொடங்கினார்.முதலாவதாக, வேளாண்மை, வேளாண் ஆராய்ச்சி, வேளாண் விரிவாக்க பணிகள், ஊரக மேம்பாடு, தோட்டக்கலை, உணவு பதப்படுத்துதல், கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளம், வேளாண் துறையில் ஸ்டார்ட்அப் திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அந்தந்த துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு தரப்பில், நிர்மலா சீதாராமனுடன் மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர், நிதி ஆயோக் உறுப்பினர் ரமே‌‌ஷ் சந்திரா, நிதித்துறை செயலாளர் சுபா‌‌ஷ் கார்க், செலவின செயலாளர் கிரி‌‌ஷ் சந்திர மர்மு, வருவாய் செயலாளர் அஜய் நாராயண பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில், நிர்மலா சீதாராமன் பேசுகையில், வேளாண் துறையின் பிரச்சினைகளுக்கு இந்த அரசு முன்னுரிமை அளிப்பதாக கூறினார்.

வேளாண் துறையில் முதலீடுகளை பெருக்குதல், சூரிய சக்தியை வருமான வாய்ப்பாக விவசாயிகள் பயன்படுத்த அனுமதித்தல், நுண் நீர்ப்பாசனத்தில் முதலீட்டை அதிகரித்தல், வேளாண் பல்கலைக்கழகங்களில் காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட யோசனைகளை விவசாய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.