பள்ளியில் வழங்கிய மாத்திரையை சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு

பள்ளியில் வழங்கிய மாத்திரையை சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு

மும்பை: மராட்டிய மாநிலம் மும்பையில் மாநகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு ரத்தசோகை குறைபாடு ஏற்படுவதை தடுப்பதற்காக  சுகாதாரத்துறை சார்பில் இரும்புச்சத்து மற்றும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கோவண்டி பைங்கன்வாடி சஞ்சய் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கும் இரும்புச்சத்து மற்றும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு இருந்தன. கடந்த திங்கட்கிழமை அன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அந்த மாத்திரைகளை வழங்கினார்கள். 

அந்த மாத்திரையை சாப்பிட்ட சந்தினி சாஹில் சேக்(வயது12) என்ற மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவள் செவ்வாய்க்கிழமை அன்று பள்ளிக்கு செல்லவில்லை. பின்னர் வியாழன் இரவு மாணவி திடீரென ரத்தவாந்தி எடுத்து இருக்கிறாள். இதை பார்த்து அவளது குடும்பத்தினர் பதறி போனார்கள். அடுத்த சிறிது நேரத்தில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள். பள்ளியில் வழங்கப்பட்ட இரும்புச்சத்து மாத்திரையை சாப்பிட்ட பின்னர் தான் அவள் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக மாணவியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 இதையடுத்து போலீசார் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பீதி அடைந்தனர். மேலும் பள்ளியில் மாணவ, மாணவிகள் சிலர் தங்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் வருவதாக தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக அங்கு படிக்கும் 160 மாணவ, மாணவிகள் அருகில் உள்ள ராஜவாடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

ஆனால் அவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.