கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு: பிஷப்புக்கு சம்மன் அனுப்பிய கேரளா போலீஸ்

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு: பிஷப்புக்கு சம்மன் அனுப்பிய கேரளா போலீஸ்

கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கன்னியாஸ்திரி கற்பழிப்பு விவகாரத்தில் வரும் 19-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் பிராங்கோ முல்லக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.

அதன் பேரில் ஜலந்தர் சென்ற திருவனந்தபுரம் போலீசார், பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஜலந்தர் பிஷப் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக இன்று கருத்து தெரிவித்த கேரள மந்திரி ஈ.பி.ஜெயராஜன், உரிய சாட்சியங்களுடன் குற்றம்சாட்டப்பட்டவரின் மீது இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், இதுதொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளதால் வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராகும்படி பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு இன்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக எர்ணாகுளம் போலீஸ் ஐ.ஜி.  விஜய் ஷக்காரே தெரிவித்துள்ளார்.